"ஹலோ தலைவரே, எப்படியோ முட்டிமோதி ஒருவழியாக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி.''”
"ஆமாம்பா, இதன் பின்னணியில் ஏதேதோ டீலிங்னு தகவல் வருதே?''”
"உண்மைதாங்க தலைவரே, அந்த டீலிங் பற்றிப் பார்க்கும் முன், பரபரப்பாக நடந்து முடிந்திருக்கும் சில சம்பவங்களை இப்ப சொல்றேன். அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில், எடப்பாடித் தரப்பு நிறைவேற்றிய தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்று, அதிரடித் தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமரேஷ் பாபு, ஓ.பி.எஸ். தரப்பின் மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்துவிட்டார். இதன் மூலம் தனக்கு க்ரீன் சிக்னல் கிடைத்ததால், இனி எந்த விதத்திலும் தடை வந்துவிடக்கூடாது என்ற பதட்டத்தோடு, அடுத்த 30 நிமிடத்திலேயே அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் தரப்பினரால் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் அ.தி.மு.க.வின் 7-ஆவது பொதுச்செயலாளர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்திருக்கிறது. இது அவர் தரப்பை மிகுந்த உற்சாகத்தில் திளைக்க வைத்திருக்கிறது. இனி தன் பதவியை எவராலும் பறிக்க முடியாது என்ற நம்பிக்கை வெளிச்சம் எடப்பாடி முகத்தில் பிறந்திருக்கிறது.''”
"எடப்பாடியின் அடுத்த மூவ்?''”
"வழக்கில் வெற்றியை எட்டிப் பறித்திருக்கும் எடப்பாடிக்கு அவர் ஆதரவாளர்கள் தொப்பி, கண்ணாடி என எம்.ஜி.ஆர். கெட்-அப்பெல்லாம் போட்டு அசத்தி னார்கள். இதை எதிர்தரப்பினர் கிண்டலடித்து வருகிறார்கள். ஓ.பி.எஸ்.ஸின் மேல்முறையீட்டு வழக்கு இனி எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும். எது நடந்தாலும் என் பதவி இனி பறிபோகாது என்று நம்பிக்கையோடு தன் சகாக்களிடம் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. தான் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதை முறைப்படி தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தாக வேண்டும் என்பதால், அதற்கான நடவடிக்கைகளில் இறங்குமாறு சி.வி.சண்முகம் உள்ளிட்ட சீனியர்களிடம் சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, அதற்கான அத்தனை ஆவணங்களும் முறைப்படி விறுவிறுப்பாகத் தயாரிக்கப்பட, அவற்றை தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கும் பணிகளில் ஜரூராகியிருக்கிறது சி.வி.சண்முகம் டீம். அடுத்து, ஓ.பி.எஸ்., இதையும் எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் ஏடாகூடமாக முட்டிமோதலாம் என்றும் எடப்பாடி தரப்பு கணிக்கிறது.''”
"எடப்பாடிக்குச் சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து, ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்திருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, வழக்கமாக தீர்ப்பின்போது எதிராளி மேல்முறையீடு செய்ய கால அவகாசத்தின் மூலம் வாய்ப்பு தரப்படும். அந்த வகையில், நீதிபதி குமரேஷ்பாபுவின் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்திருக்கிறார் ஓ.பி.எஸ். இதன்மீதான விசாரணை, 31-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீதி மன்றத்தில் முன்வந்தது. இந்த மேல்முறை யீட்டில் தங்களுக்கு சாதகமாக ஏதேனும் அதிசயம் நடக்காதா? என்கிற ஏக்கம் ஓ.பி.எஸ். முகாமில் எதிரொலிக்கிறது. மீண்டும் மீண்டும் மேல்முறையீடு என்று சென்று கொண்டே இருப்ப தால், ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவாளர்கள் அவ ரது அரசியல் மீது நம் பிக்கையிழந்து வருகிறார் கள். இதனால், இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை பார்த்துவிட்டு, அதன் பிறகு ஓ.பி.எஸ்.ஸை தொடர்ந்து ஆதரிப்பதா? இல்லை எடப்பாடி பக்கம் சென்றுவிடலாமா? என்று அவர்கள் இப்போதே தனித்தனியே ஆலோசிக்கத் தொடங்கிவிட்டனர். தன் ஆதரவாளர்களின் ஊச லாட்டத்தால் அரண்டுபோயிருக்கிறார் ஓ.பி.எஸ்.''”
"அதனால்?''”
"சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்குப் பாதகமானதை அடுத்து, பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோரிடம் அடுத்த கட்டம் பற்றி ஓ.பி.எஸ். விவாதித்தார். அப்போது மனம் கலங்கிய படியே அவர் பேசியிருக்கிறார். குறிப்பாக, பா.ஜ.க.வை ரொம்பவும் நம்பினேன்; ஏமாற்றிவிட் டார்கள். குஜராத் தேர்தல் முடிந்து முதல்வர் பதவியேற்கும் விழாவுக்கு என்னை அழைத்தார்கள். நானும் போனேன். அங்குள்ள பா.ஜ.க. தலைவர் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தி, பா.ஜ.க. தலைமைக்கு ஏதேனும் தகவல் சொல்லணும்னா இவரிடம் சொல்லுங்கள். இவர் டெல்லிக்கு இணைப்புப் பாலமாக இருப்பார் என என்னிடம் ஜே.பி.நட்டா சொன்னார். அந்த தலை வரோடு நட்பில் இருந் தேன். அவரும் நம் பிக்கை கொடுத்தபடி தான் இருந்தார். ஆனா லும் கைவிட்டுவிட்டனர்’ என்று புலம்பித் தள்ளி யிருக்கிறார். இந்த நிலையில், மோடி அல் லது அமித்ஷாவை சந்தித்துப் பேசுமாறு தனது மகன் ரவீந்திரநாத் திடம் வலியுறுத்தினார். ரவீந்திரநாத்துக்கு அப்பாயின்மென்ட் இதுவரை தரப்படவில்லை.''”
"பா.ஜ.க. அண்ணாமலை கர்நாடகத் தேர்தலிலும் குட்டையைக் குழப்புகிறாரே?''
"ஆமாங்க தலைவரே, மே 10-ஆம் தேதி ஒரேகட்டமாக கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் நடக்கப்போகுது. அடுத்த மூன்றாம் நாளில், அதாவது 13-ஆம் தேதி வாக்கு எண் ணிக்கை நடக்கும். கர்நாடக மாநிலத்தில் பல தொகுதிகளில் தமிழர்கள் கணிசமாக இருக்கிறார்கள். சில தொகுதிகளில் தமிழர்களின் வாக்குகள்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகிறது. அதனால் தமிழர்களின் வாக்குகளைக் கவர, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று பா.ஜ.க.வின் தேசியத் தலைமை தீர்மானித் திருக்கிறதாம். அதேபோல் 2024-ல் நடக்க இருக் கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியோடுதான் தமிழகத்தில் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் தேசியத் தலைமை முடிவெடுத்திருக்கிறது. இதுகுறித்து அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை யிடமும் அவர்கள் பேசி யிருக்கிறார்கள். இதை யறிந்து திகைத்துப்போன பா.ஜ.க. அண்ணாமலை, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால், என்னால் இயல் பாக தேர்தல் வேலைகளை கவனிக்க முடியாது. அ.தி. மு.க.வுடன் கூட்டணி என்பது தேவையற்ற குழப் பத்தை ஏற்படுத்தும் என்று ஜே.பி.நட்டாவுக்கு தகவல் கொடுத்து, கர்நாடகாவிலும் குட்டையைக் குழப்ப ஆரம்பித்துவிட்டார்.''
"சரிப்பா, எடப்பாடித் தரப்போடு பா.ஜ.க. போட்டிருக்கும் டீலிங் பத்தி சொல்லு.''
"எடப்பாடிக்குக் கிடைத்த இந்த வெற்றியின் பின்னணியில் பா.ஜ.க.தான் இருக்கிறது என் கிறார்கள் டெல்லி அரசியல் வட்டாரத்தினர். தீர்ப்பு வருவதற்கு முன்பே, கேரள முன்னாள் கவர்னரும் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவரு மான சதாசிவம் மூலம் அ.தி.மு.க.விற்கும் பா.ஜ.க. விற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்திருக் கிறது. அப்போது, வரும் நாடாளுமன்றத் தேர்த லில் நீங்கள் பா.ஜ.க. அணியுடன்தான் கூட்டணி வைக்கவேண்டும். அதற்குச் சம்மதம் என்றால் உதவத் தயார் என்று பா.ஜ.க. சொல்லியிருக்கிறது. உடனே எடப்பாடி, எங்களிடம் ஓ.பி.எஸ், சசிகலா, தினகரன் ஆகியோரைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளும்படி மட்டும் வற்புறுத்தாதீர்கள். மற்றபடி உங்களோடு தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்வதில் எங்களுக்கு எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.''
"ம்...''”‘
"பா.ஜ.க.வோ ஓ.பி.எஸ்., சசி, தினகரன் ஆகிய மூவரும் தனித்தனிக் கட்சியாக இயங்கினாலும், பா.ஜ.க. ஆதரவு பெற்ற சுயேச்சைகளாகத் தேர்தலில் நிற்பார்கள். அதைக் கண்டுகொள்ளக் கூடாது என்று எடப்பாடியிடம் நிர்பந்தக் குரலில் சொல் லப்பட்டிருக்கிறது. வேறு வழியின்றி இதற்கு தலையாட்டினாராம் எடப்பாடி. இதன் பின்ன ணியில்தான் அவருக்குச் சாதகமான தீர்ப்பு வந்தி ருக்கிறது என்று பா.ஜ.க. தரப்பே சொல்கிறது. அதேபோல் எங்களுடனான கூட்டணியை உங்கள் அண்ணாமலை எதிர்க்கிறார். தனியே வார் ரூம் அமைத்து, அ.தி.மு.க.வுடன் கூட்டணி கூடாது என்று எங்களுக்கு எதிராக மோசமான பிரச் சாரத்தை அவர் நடத்தி வருகிறார் என்றெல் லாம் எடப்பாடி, அண்ணாமலை மீது குற்றச்சாட்டை வைத்தபோது, 2024 நாடாளு மன்றத் தேர்தலின்போது அண்ணாமலை, தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கமாட்டார் என்றும் டெல்லி வாக்குறுதி கொடுத்திருக்கிறதாம். இந்த டீலிங்குகளுக்கு எடப்பாடி ஒத்துக்கொண்ட நிலையில்தான்... அமித்ஷா, தனியார் தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டியில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதி என்று அறிவித்திருக்கிறாராம்.''”
"எடப்பாடியோடு பா.ஜ.க. போட்டுக் கொண்ட டீலிங்குகள் ஓ.பி.எஸ். தரப்புக்குத் தெரியுமா?''”
"ஓ.பி.எஸ்.ஸுக்கும் இந்த விபரங்கள், தீர்ப்புக்குப் பிறகு சொல்லப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க.வே தன் கைவிட்டுப் போனதை உணர்ந்த ஓ.பி.எஸ். முதலில் கலங்கியிருக்கிறார். அதன் பிறகு, நீங்கள் எதைச் செய்தாலும் என்னைக் கைவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்று உருக்கமாகச் சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க. தரப்பு, உங்கள் மகனுக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் உண்டு. உங்கள் தரப்பினருக்கும் சில பதவிகளும் தரப்படும். அதனால் நீங்கள் நிம்மதியாக இருங்கள். வழக்கம்போல் கட்சிக்கான சட்டப் போராட் டத்தை நடத்திக்கொள்ளுங்கள் என்று பா.ஜ.க. தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. டெல்லி யின் சப்போர்ட்டோடு எப்படியாவது அ.தி. மு.க.வுக்குள் நுழைந்துவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்த ஓ.பி.எஸ்., நடக்கிற சம்பவங்களால் குழப்பத்திலேயே தத்தளிக்கிறாராம்.”
"சரிப்பா, நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டும் வேளாண்துறை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், துறை வாரியான மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின் றன. ஏப்ரல் 21-ஆம் தேதி வரை 2023-24-க்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கவிருக்கிறது. எனவே, கடந்த நிதியாண்டில் பயன் படுத்தப்படாத நிதிகள் அரசுத்துறைகளில் இருந்தால், அவற்றை மார்ச் 31-க்குள் அரசிடம் சரண்டர் செய்திட வேண்டும் என்று துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. காரணம், பல துறைகளிலும் இப்படி பயன் படுத்தப்படாத நிதி ஏராளமாக இருந்ததாம். இதைக்கண்ட அதிகாரிகள் கடைசிநேரத்தில் பொய்க்கணக்குகளை எழுதி, பெரிய அளவுக்குக் கல்லா கட்டிவிட்டார் களாம். குறிப்பாக பொதுப் பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள் ளாட்சித்துறை, நகர்ப்புற உள்ளாட்சித்துறை, கூட் டுறவுத்துறை, செய்தித் துறை உள்ளிட்டவற்றில் இப்படி கோல்மால்கள் ஏகத்துக்கும் நடந் திருக்கிறது என்றும், இதுகுறித்து முதல்வர் விசாரிக்க வேண்டும் என்றும் கோட்டை அதி காரிகளே வேண்டுகோள் வைக்கிறார்கள்.''
_____________
இறுதிச் சுற்று
தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட் டத்தின் நூற்றாண்டை மார்ச் 30-ந்தேதி தொடங்கி ஆண்டு முழுவதும் அரசு நிகழ் வாக கொண்டாடப்படவிருப்பதை 30-ந் தேதி வியாழக் கிழமை நடந்த சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கேரளா மாநி லத்தில் பெரியார் சிறை வைக்கப்பட்ட அருவிக்குத்து கிராமத்தில் நினைவிடம் அமைக்கவிருப்பதையும், வைக்கத்தில் உள்ள பெரியாரின் நினைவுச் சின்னத்தை 8 கோடி ரூபாயில் புதுப்பிக்கவும் முடிவு செய்திருப்பதையும் பேரவையில் அறிவித்தார் ஸ்டாலின். செப்டம்பர் 17-ல் வைக்கம் விருது வழங்கவும், வைக்கம் போராட்டத்தின் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடவும் தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. தனது உரையில், பெரியாரை பற்றி கலைஞர் எழுதிய கவிதை ஒன்றையும் வாசித்தார் முதல்வர் ஸ்டாலின்.
-இளையர்
எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்? -கர்நாடகா சர்வே!
மே 25-ந் தேதியுடன் கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கர்நாடகாவுக்கு மே 10 -ஆம் தேதி தேர்தலை அறிவித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இரண்டு முக்கிய சர்வே நிறுவனங்கள் வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளன. 6 விதமான கேள்விகள் கேட்கப்பட்ட அந்த கருத்துக்கணிப்பில், "தற்போதைய பா.ஜ.க. அரசின் செயல்பாடு மோசம்' என 51 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். ஆட்சி மாற்றம் வேண்டும் என 58 % பேர் தெரிவித்துள்ளனர்.
எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? என்பதற்கு...
காங்கிரஸ் 121, பா.ஜ.க. 70, ம.ஜ.த. 29, பிற 4 என கருத்துத் தெரிவித் துள்ளனர். கர்நாடகாவில் பா.ஜ.க.வுக்கு முதல் அடியைக் கொடுத்து இந்தியா முழுக்க சரிவை தொடங்கி வைக்கப்போகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
-ஜீவாதங்கவேல்